Back
Home » ஆரோக்கியம்
அன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்!
Boldsky | 10th May, 2020 11:00 AM
 • காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது

  வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலான அம்மாக்கள் கூறும் அறிவுரை தான், "காய், பழத்தை மிச்சம் வைக்காதே, அதுல தான் எல்லா சத்தும் இருக்கு" என்று. இப்போது அதையே தான் நானும் எல்லா அம்மாக்களுக்கும் கூறுகிறேன். காய்கறிகள் மற்றும் பழங்களில் தான் உடலுக்குத் தேவையான அனைத்து புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை முறையாக சாப்பிட்டு வந்தாலே, இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏராளமான உடல் நல பிரச்னைகளை சுலபமாக தடுத்துவிடலாம். அதுமட்டுமின்றி, கலோரிகள் நிறைந்த குளிர்பானங்கள், உப்பு, கொழுப்பு மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்த்திடலாம்.


 • அதிகமான நகர்வு

  அன்றாட வீட்டு வேலைகளை செய்யும் போதே, வீட்டுக்குள்ளேயே அதிகமாக நடக்க முயற்சிக்கவும். நடப்பதற்கென்று நேரம் ஒதுக்க முடியாது அல்லவா? எனவே, வேலை செய்யும் வாய்ப்புகளோடு சேர்த்து நடப்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரே இடத்தில் அமராமல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எழுந்து நடக்கலாம். இதன் மூலம் உடல் எடை குறைவதோடு, சுறுசுறுப்புடனும் இருக்கலாம். அதுமட்டுமின்றி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க, சில வகை புற்றுநோய்கள் ஏற்படாமலும் தடுத்து, ஆரோக்கியமான முறையில் வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளவும் உதவிடும். அது தவிர, தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருந்தால், சீரான மனநிலையும் பெற்றிடலாம், நிம்மதியான உறக்கத்தையும் பெற்றிடலாம்.


 • நிம்மதியான தூக்கம்

  தூக்கமின்மை என்பது தான் உடல் மற்றும் மனம் சார்ந்த ஏராளமான உடல் நல பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமைந்திடுகிறது. தேவையான தூக்கம் இல்லாத பட்சத்தில் இதய நோய், உடல் பருமன், நீரிழிவு நோய், மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகக் கூடும். எனவே, தினமும் தேவையான அளவு தூங்கி எழுந்திருப்பதே மிகவும் முக்கியமானது.


 • மன அழுத்தத்தை தவிர்ப்பது

  மன அழுத்தம் தான் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது என்று ஆய்வுகள் பல கூறுகின்றன. மனிதனாக பிறந்த அனைவருமே ஏதாவது ஒருவகையில் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மன அழுத்தமானது, உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய், மனசோர்வு, ஆஸ்துமா போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க செய்கிறது. எனவே, போதுமான வகையில், மனஅழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க பாருங்கள். மனதிற்கு பிடித்த விஷயத்தில் கவனம் செலுத்தி மனஅழுத்தத்தை விரட்டினால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்வை பெற்றிட முடியும்.


 • நீரேற்றம் மிகவும் முக்கியம்

  ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் அடிப்படையான தேவையே நீர் தான். பெரியர்கள் நாளொன்றிற்கு குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் நமது உடல் ஆரோக்கியமான இருக்கும். எனவே, வீட்டில் இருக்கும் போதோ, அல்லது வெளியே செல்லும் போதோ எப்போதும் உங்கள் கையில் தண்ணீர் நிரம்பிய பாட்டிலை வைத்துக் கொண்டு அவ்வப்போது அதனை நிரம்பிக் கொள்ளுங்கள். பிற பானங்களை தவிர்த்து தண்ணீர் நிறைய குடிப்பதை பழக்கப்படுத்திக் கொண்டாலே சிறந்த மாற்றங்களை நீங்களே உணரலாம்.


 • முறையான பரிசோதனை

  அம்மாக்கள் என்றாலே நாள் முழுவதும் பிஸியாக இருப்பது சகஜம் தான். அதற்காக உங்களது ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தவில்லை என்றால், யார் உங்களது குடும்பத்தை பார்த்து கொள்வது. எனவே, உங்களுக்காக இல்லையென்றாலும், உங்களது குடும்பத்தின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டாவது சீரான இடைவெளியில் உடல் நல பரிசோதனை மேற்கொண்டே ஆக வேண்டும். இதன் மூலம், பெண்கள் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய இதய நோய், மார்பக புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்திடலாம். முறையான உடல் நல பரிசோதனைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால், குறிப்பிட்ட சில பிரச்சனைகளை தடுத்திடுவதோடு, சில பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளி எரிந்திட உதவியாக இருக்கும்.


 • குறிப்பு

  தனக்காக இல்லாமல், தன் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து வரும் ஒவ்வொரு அன்னையும், அந்த வீட்டின் தெய்வம் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே, இனிமேலாவது அம்மாவின் வார்த்தையை உதாசீனப்படுத்தாமல், அவர்களுக்கென்று சிறிது நேரம் ஒதுக்கி சந்தோஷப்படுத்துவோம். அம்மாக்களின் சந்தோஷத்தில் தான் ஒவ்வொரு வீட்டின் சந்தோஷமும் அடங்கியுள்ளது. உலகில் அம்மாவின் உருவில் வாழ்ந்து வரும் அனைத்து பெண் கடவுள்களுக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்....
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பது எவராலும் மறுக்க முடியாத வேத வாக்கு. ஒரு குடும்பத்தின் ஆணி வேரே பெண் தான். அது தாயாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், சகோதரியாக இருக்கலாம். எந்த ஸ்தானத்தில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும், அவள் வாழ்வில் பெண்மையின் முழுமைத்துவத்தை அடைவது தாய் எனும் பதவியை அடையும் போது தான். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் என்னென்ன தேவை, என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை அறிந்து பார்த்து பார்த்து செய்பவள் தான் அம்மா. அப்படிப்பட்ட அம்மாவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. வருடத்தில் அனைத்து தினங்களிலும் நாம் நம் அம்மாவை வணங்கி போற்றிட வேண்டியது அவசியம் தான். ஆனால், இன்றைய அவசர வாழ்க்கையில், அம்மாவின் அருகே அமர்ந்து ஆசையாக 4 வார்த்தை பேசக் கூட நேரமில்லை இங்கு பலருக்கு.

ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமான கொண்டாடப்படுகிறது. அன்னையரை கௌவரப்படுத்தவும், அவர்களின் பிணைப்புகள் மற்றும் தாயின் செல்வாக்கை கொண்டாடும் விதமாக தான் இந்த அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. பரிசுகள், ஆச்சரியங்கள் என பலவிதமான வகையில் நமது அம்மாக்களை நாம் மகிழ்ச்சியடைய செய்கிறோம். ஆனால், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அவர்களை ஊக்குவிப்பதை விட சிறந்ததோர் வழி எனக்கு வேறொன்றும் தெரியவில்லை. ஒரு ஆரோக்கியமான தாய் தான், ஆரோக்கியமான வீட்டிற்கு அடையாளம்.

எனவே, இந்த அன்னையர் தினத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக் கூடிய சிறு சிறு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அன்றாட வேலைகளை செய்யும் போது, இந்த சிறு மாற்றத்தை மட்டும் நினைவில் கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடலாம். வாருங்கள், உங்களுக்கான சில ஆரோக்கிய குறிப்புகளை இப்போது தெரிந்து கொள்வோம்...