Back
Home » ஆரோக்கியம்
உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் படு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!
Boldsky | 18th Nov, 2019 12:20 PM
 • குளிர்ச்சியான கைகள்

  இரத்த நாளங்களில் அழற்சி அல்லது வீக்கம் ஏற்பட்டிருந்தால், விரல்கள், கால்விரல்கள், காதுகள் மற்றும் மூக்கு போன்றவை சூடாகவும், கடினமாகவும் இருக்கும். மிகவும் குளிர்ச்சியான சூழ்நிலையில் இந்த பகுதியைச் சுற்றியுள்ள தோல் வெள்ளையாகி, பின் நீல நிறத்தில் மாறும். இரத்த ஓட்டம் திரும்பியதும், தோல் பின்னர் சிவப்பு நிறமாக மாறும்.


 • கழிவறை பிரச்சனைகள்

  2 முதல் 4 வாரங்களுக்கு மேல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அது நோயெதிர்ப்பு மண்டலம் சிறுகுடல் அல்லது செரிமான மண்டலத்தின் சுவர்களை பாதித்துள்ளதைக் குறிக்கும் எச்சரிக்கை அறிகுறியாகும். சில சமயங்களில் மலச்சிக்கலும் கவனத்திற்குரியது. உங்களது குடலியக்கம் மிகவும் கடினமாகவும், மிகவும் சிரமமாகவும் இருந்தால், உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் குடலை மெதுவாக செயல்படுத்த செய்யும். சில சமயங்களில் இப்பிரச்சனைக்கு பாக்டீரியா, வைரஸ் மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகளும் காரணங்களாக இருக்கலாம்.


 • வறட்சியடைந்த கண்கள்

  ஆட்டோ-இம்யூன் கோளாறு இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் உடலுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதிலாக உடலைத் தாக்குகிறது என்று அர்த்தம். ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் மற்றும் லூபஸ் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். ஆட்டோ-இம்யூன் கோளாறு உள்ள பலருக்கு கண்கள் வறட்சியடைந்து உள்ளது. அதுமட்டுமின்றி, மங்கலான பார்வை, சிவந்த கண்கள், சில சமயங்களில் கண்களில் வலி கூட ஏற்படலாம்.


 • களைப்பு

  காய்ச்சலின் போது சந்திக்கும் களைப்பு அல்லது அலுப்பை, நீங்கள் இயல்பான நிலையிலும் உணர்ந்தால், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். மேலும் மிகுந்த களைப்புடன், மூட்டு அல்லது தசைகளில் கடுமையான வலியை உணரக்கூடும்.


 • காய்ச்சல்

  ஒருவேளை உங்களுக்கு எப்போதுமே வழக்கத்தை விட அதிகமாக உடல் வெப்பம் இருந்தால், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதற்கான அறிகுறி. அதுவும் அதிகப்படியான கிருமிகளின் தாக்குதலால், உடலின் உட்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


 • தலைவலி

  சில சமயங்களில் தலைவலியும் நோயெதிர்ப்பு மண்டல பிரச்சனைகளுக்கு தொடர்புடையது. உதாரணமாக, இது வாஸ்குலிடிஸாக இருக்கலாம். இது ஒரு தொற்று அல்லது தன்னுடல் தாக்க நோயால் ஏற்படும் இரத்த நாளத்தின் வீக்கம் ஆகும்.


 • அரிப்பு

  உடலின் தோல் பகுதி கிருமிகளுக்கு எதிரான முதல் தடையாகும். ஒருவரது நோயெதிர்ப்பு அமைப்பு அதன் வேலையை எவ்வளவு சிறப்பாகச் செய்கிறது என்பதை இது பிரதிபலிக்கும். அரிப்பு, வறட்சி, சிவந்த சருமம் போன்றவை அழற்சிக்கான பொதுவான அறிகுறிகளாகும். அதுவும் அழற்சியால் ஏற்படும் அரிப்பு மிகவும் வலிமிக்கதாக இருக்கும். லூபஸ் உள்ளவர்களது மூக்கு மற்றும் கன்னங்களில் பட்டாம்பூச்சி வடிவில் தடிப்புக்கள் காணப்படும்.


 • மூட்டு வலி

  மூட்டுகளுக்குள் உள்ள புறணி வீக்கமடையும் போது, அவற்றைச் சுற்றியுள்ள பகுதி தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருக்கும். இது கடினமானதாகவோ அல்லது வீக்கமாகவோ இருக்கலாம். மேலும் இது ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளுடன் நிகழலாம். முக்கியமாக இப்பிரச்சனை காலையில் இது மிகவும் மோசமாக இருப்பதை உணரலாம்.


 • முடி உதிர்வு

  சில சமயங்களில் நோயெதிர்ப்பு மண்டலம் மயிர்கால்களை தாக்கும். இந்நிலையில் முகம், தலை அல்லது உடலின் இதர பகுதியில் உள்ள முடி உதிர ஆரம்பிக்கும். இந்நிலையை அலோபீசியா அரேட்டா என்று அழைப்பர். ஒருவருக்கு லூபஸ் இருந்தால், அதன் அறிகுறியாக தலைமுடி கொத்தாக கையில் வரும்.


 • தொடர்ச்சியான நோய்த்தொற்று

  வருடத்திற்கு இரண்டு முறைக்கு மேல் ஆன்டி-பயாடிக்குகளை எடுத்தால், உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் குறைந்துள்ளது என்று அர்த்தம். நாள்பட்ட சைனஸ் தொற்றுகள், ஒரு வருடத்திற்கு 4 முறைக்கு மேல் காது தொற்றுக்கள் அல்லது ஒரு முறைக்கு மேல் நிமோனியா தொற்று ஏற்படுவது போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள பிரச்சனையைக் குறிக்கிறது.


 • சூரிய கதிர்களுக்கு சென்சிடிவ்

  ஆட்டோ-இம்யூன் கோளாறு உள்ளவர்களுக்கு சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டால் அழற்சி ஏற்படும். இத்தகையவர்களுக்கு சூரியன் சருமத்தில் பட்டால் வெடிப்புக்கள், அரிப்பு, தோல் உரிவது போன்ற பிரச்சனைகள் எழும். இல்லாவிட்டால், கடுமையான தலைவலி அல்லது குமட்டல், குளிர்காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடும்.


 • கைகள் மற்றும் கால்கள் மரத்துப் போதல்

  உங்கள் கைகள் மற்றும் கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறதா? அப்படியானால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம். அதாவது உடலில் தசைகளுக்கு சிக்னல் அனுப்பும் நரம்புகளை நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள திசுக்கள் தாக்கி, அதன் விளைவாக கால்களில் இருந்து கைகள் வரை மரத்துப் போக ஆரம்பிக்கலாம்.


 • விழுங்குவதில் சிரமம்

  நீங்கள் உணவை விழுங்கும் போது எளிதாக விழுங்க முடியாமல் இருந்தால், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏதோ பெரிய பிரச்சனை உள்ளது என்பதற்கான அறிகுறி. அதில் சிலர் உண்ணும் உணவு தொண்டை அல்லது நெஞ்சுப் பகுதியில் சிக்கிக் கொண்டது போன்று உணர்வார்கள். இன்னும் சிலர் விழுங்க முடியாமல் திணறுவார்கள்.


 • விவரிக்க முடியாத எடை மாற்றம்

  உங்கள் உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியில் எவ்வித மாற்றமும் இல்லாமல், ஒருவரது உடல் எடையில் மாற்றங்கள் தெரிந்தால், அவரது நோயெதிர்ப்பு மண்டலத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். எனவே இந்நிலையில் கவனமாக இருந்து, உடனே மருத்துவரை அணுகுங்கள்.


 • வெள்ளைத் திட்டுக்கள்

  சில சமயங்களில் நோயெதிர்ப்பு மண்டலம் சரும நிறமிகளான மெலனோசைட்டுகளுடன் எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும். இம்மாதிரியான நேரத்தில் தான் உடலில் ஆங்காங்கு வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.


 • மஞ்சள் நிற கண்கள் அல்லது சருமம்

  பொதுவாக கண்கள் அல்லது சருமம் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அதை மஞ்சள் காமாலை என்று அழைப்பர். ஆனால் இந்த மஞ்சள் காமாலை எதனால் வருகிறது என்றால், நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமான கல்லீரல் செல்களைத் தாக்கி அழிக்க ஆரம்பிப்பதால் தான். இதன் விளைவாகவே ஆட்டோ-இம்யூன் ஹெபடைடிஸ் ஏற்படுகிறது.
நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும் வரை தான் நாம் பாதுகாப்பான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் சில சமயங்களில் நமது நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக இருப்பதில்லை. சில நேரங்களில் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள செல்கள், திசுக்கள் செயல்பட வேண்டிய வழியில் செயல்படாது. இப்படி அடிக்கடி செயல்பட ஆரம்பித்தால், அப்போது அலர்ஜி, ஆஸ்துமா அல்லது தோலழற்சி போன்றவை ஏற்படலாம்.

இல்லாவிட்டால் நோயெதிர்ப்பு மண்டலம் உடலுக்கு பாதுகாப்பு அளிப்பதை விட உடலை தாக்க ஆரம்பித்துவிடும். இதனால் ஆட்டோ-இம்யூன் குறைபாடுகளான ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் அல்லது டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்படக்கூடும். ஒருவரது நோயெதிர்ப்பு மண்டல பிரச்சனைகளால் குறைந்தது 80 வகையான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இவை அனைத்துமே உடலினுள் அழற்சியை உண்டாக்குபவைகள். ஆனால் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தில் பிரச்சனைகள் இருந்தால், அது ஒருசில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிக்காட்டும்.

இக்கட்டுரையில் அந்த எச்சரிக்கை அறிகுறிகள் தான் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், சற்றும் தாமத்திக்காமல் உடனே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள்.