உலகில் ஆண்டுதோறும் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை தருகிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை (ஐந்து வயதுக்குட்பட்ட) நிமோனியா காரணமாக மரணமடைகிறது என்கிறது இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கை. 2015இல் இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டனர் என்றும், அந்த ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா தான் முதலிடத்தில் இருந்தது என்றும் தெரிவித்துள்ளது லான்செட் என்ற மருத்துவ இதழ்.
நிமோனியா பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12ஆம் தேதியை "உலக நிமோனியா தினமாக" உலக சுகாதார நிறுவனம் கடைபிடித்து வருகிறது. நிமோனியாவால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு நிமோனியா முதன்மையான காரணமாக உள்ளது. முதியவர்களின் இறப்பைப் பொருத்தவரை மாரடைப்பு, பக்கவாதத்திற்கு அடுத்தப்படியாக மூன்றாவது காரணமாக நிமோனியா உள்ளது. மார்பகப் பகுதியை எக்ஸ் ரே எடுத்து பரிசோதித்தல், ரத்தம் மற்றும் சளி ஆகியவற்றை பரிசோதிப்பதன் மூலம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தலாம்.