Back
Home » உலக நடப்புகள்
சந்திரனால் வரும் யோகங்கள் கோடீஸ்வரனாக்கும் - தோஷங்கள் நீங்க பரிகாரங்கள்
Boldsky | 21st Oct, 2019 11:15 AM
 • சந்திரன் தரும் யோகங்கள்

  சந்திரன் கிரகம் முகத்திற்கு காரகம் வகிக்கிறார் என்று சொல்லுவார்கள். ஒருவரின் முகத்தில் தெய்வீகதன்மையோடு இருக்கவேண்டும் என்றால் அவர்க்கு சந்திரனோடு குரு சுக்கிரன் சேர்க்கையோ பார்வையோ இருந்தால் முகம் தெய்வீக தன்மையோடும், அருளோடும் அமையும். சந்திரன் தண்ணீர் காரகன், சந்திரன் பாதிக்கப்பட்டால் சிலருக்கு தண்ணியில கண்டம் கூட வரும். சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் தடை தாமதங்களை ஏற்படுத்தும். சந்திரன் தரும் தோஷங்கள் திருமணதடை, தோல்விகள், மனநிலை பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.


 • சந்திரனால் நீசபங்க ராஜயோகம்

  சந்திரனுடன் கிரகங்கள் சேர்ந்து இருக்கும் இடம். ஜாதக பலம், பூர்வ புண்ணிய பாக்கிய பலம் ஆகியவற்றை வைத்துத்தான் யோக, அவயோகங்கள் அமைகின்றன. சந்திரன் மூலம்தான் பலவகையான யோகங்கள் ஜாதகத்தில் உண்டாகின்றன. சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகம் மிகவும் பலம் பெறுகிறது. ஒரு நீச கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் நிற்கும்போது அந்த நீச அம்சம் நீங்கி, நீசபங்க ராஜயோக அமைப்பு உண்டாகிறது.


 • அமாவாசை யோகம்

  சூரியனும், சந்திரனும் சேர்ந்து ஒரே ராசியில் இருப்பது நிறைந்த அமாவாசை. சூரியனுக்கு ஏழில் சந்திரன் இருந்தால் பூர்ண பெளர்ணமி. சூரியன் இருக்கும் ராசிக்கு அடுத்த ஆறு ராசிக்குள் சந்திரன் இருந்தால் வளர்பிறை. சூரியனுக்கு எட்டாம் ராசி முதல் பன்னிரண்டாம் ராசி வரை தேய்பிறை. இந்த அமாவாசை யோகம் உள்ள ஜாதகர் பலவகைகளில் திறமைமிக்கவராக இருப்பார். இவர்களுடைய நிழல் செயல்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இவர்கள் படைப்புத் துறையில் புகழ்பெறும் யோகம் உடையவர்கள். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், கவிஞர், கதாசிரியர், கல்லூரி பேராசிரியர், விரிவுரையாளராக வருவதற்கு இந்த யோகம் மிகவும் கை கொடுக்கும்.


 • குரு சந்திர யோகம்

  சந்திரனுடன் குரு சேர்ந்து இருப்பது குரு சந்திர யோகமாகும். இந்த யோகம் உள்ளவர்கள் நல்ல வசதி, மதிப்பு, மரியாதையுடன் இருப்பார்கள். படித்த படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. வெளிநாடுகளில் நீண்ட காலம் தங்கக்கூடிய யோகம் உண்டு. நமக்கு அது கிடைக்கலையே நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்று ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும்.


 • சந்திர மங்கள யோகம்

  சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 4, 7, 10ல் மங்களன் என்று சொல்லப்படும் செவ்வாய் இருப்பது சந்திர மங்கள யோகமாகும். இதன் மூலம் சொத்து, புகழ், செல்வம், செல்வாக்கு, உயர் பதவி, போலீஸ், தீயணைப்புத்துறை, ராணுவம் மற்றும் அரசு உயர் பதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டிட கட்டுமானத் தொழில், செங்கல் சூளை, நெருப்பு சம்பந்தமான தொழில்கள் தோட்டம், எஸ்டேட், தோப்பு, நிலபுலன்கள் என வசதியாக வாழ்வார்கள்.


 • தோஷமில்லாத ஜாதகம்

  சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 4, 7, 10ல் குரு இருப்பது கஜகேசரி யோகமாகும். இந்த அமைப்பு பல தோஷங்களை நீக்கும் என ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றது. மேலும் சில நூல்களில் சந்திரனுக்கு எழில் சப்தமமாக குரு இருப்பதுதான் மிகப்பெரிய ராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது.


 • சந்திரன் புதன் சுக்கிரன்

  சந்திரனுக்கு இரண்டில் புதன் இருப்பது மிகச்சிறந்த அமைப்பாகும். இயல், இசை, நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும். சொற்பொழிவாளர்கள், மேடைப் பேச்சு, கதாகாலட்சேபம், வாக்கு சாதுர்யம் இருக்கும். வாய்மூலம் பேசி பொருள் ஈட்டும் யோகம் உண்டு. சந்திரன், புதன், சுக்கிரன் இந்த மூன்று கிரகங்களுக்கும் ஜாதக கட்டத்தில் ஒன்றாக சேர்ந்து ஒரே ராசியில் இருந்தால், ஏதாவது பார்வை, சார பரிவர்த்தனை ஏற்பட்டால் ஜாதகர் அதிபுத்திசாலியாக, பல்கலை வித்தகராக இருப்பார். ஒரு விஷயத்தை பார்த்த உடனேயே அதை செய்துகாட்டி விடுவார்கள். எந்த வித்தையும் இவர்களுக்கு சுலபத்தில் வரும். இயல், இசை, நாடகம், நாட்டியம், நடனம், கலை, காவியம், கவிதை, படைப்பு, எழுத்து, பேச்சு எல்லாம் எளிதில் கைகூடி வரும். சிறந்த கலா ரசிகராகவும் இருப்பார்கள்.


 • பணம் புகழ்

  சந்திரன் புதன் சுக்கிரன் கூட்டணி அமைந்துள்ள ஜாதகக்காரர் தன்னுடைய திறமையான வார்த்தை ஜாலங்களால் பிறரை மயக்கி வசப்படுத்தி விடுவார்கள். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்வதில் திறமைமிக்கவர்கள். அதே நேரம் வாழ்க்கையில் பல உயர்வு, தாழ்வுகளை சந்திப்பார்கள். வக்கீல்களாகவும், ஆடிட்டர்களாகவும் இருப்பார்கள். சஞ்சலமும், சபலமும் அதிகம் இருக்கும். காதல், காம சுகத்தில் விருப்பம் உடையவர்கள். தீய பழக்கவழக்கங்கள் இவர்களை எளிதில் வந்து பற்றிக் கொள்ளும்.நெறி தவறிய வாழ்க்கை காரணமாக அவமானங்களை சந்திக்க நேரலாம். எந்தத் துறையில் இருந்தாலும் அதில் எப்படியாவது புகழ், பணம் சம்பாதித்து விடுவார்கள்.


 • நாக்கில் சனி

  சந்திரனுக்கு இரண்டாம் இடமான தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி இருந்தால் நிறைகுறைகள் இருக்கும். இந்த அமைப்புதான் ஏழரை சனியின் கடைசி தனஸ்தான சனியாகும். இவர்களை கரி நாக்கு உடையவர்கள் என்று சொல்வார்கள், எதை எப்படி பேசவேண்டும் என்று தெரியாமல் பேசி சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். இவர்களின் பேச்சே இவர்களுக்கு பல நல்ல விஷயங்கள் கூடிவராமல் செய்துவிடும்.


 • சந்திரனால் ஏற்படும் தோஷங்கள்

  சனியும், சந்திரனும் ஜாதக கட்டத்தில் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் புனர்பூ தோஷம் உண்டாகிறது. ஒரே ராசியில் சனியும், சந்திரனும் சேர்ந்திருப்பது, சனியின் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது, சனி சந்திரன் பார்வை, பரிவர்த்தனை, கிழமை, தேதிகள் மூலம் சனிசந்திரன் தொடர்பு ஏற்படுவது எல்லாமே எதிர்பாராத விதமாக நடக்கும். மன சஞ்சலம், சபலம் மிகுந்திருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். ஆளுக்கு தகுந்தாற்போல், இடத்திற்கு தகுந்தாற்போல் குண இயல்புகளை சீக்கிரத்தில் மாற்றிக் கொள்வார்கள். முயற்சி செய்யும்போது முடியாது, நடக்காது என்று நினைத்தால் அப்படியே நடந்து விடும். திருமண விஷயத்தில் எல்லாம் கூடிவந்தாலும் திருமணம் முடியும் வரை ஒரு நிச்சயமற்றதன்மை இருக்கும். சிலருக்கு நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிடும்.


 • சந்திரன் ராகு கேது

  சந்திரனுடன் நிழல் கிரகங்களான ராகுகேது சம்பந்தப்படும்போது கிரஹண தோஷம் உண்டாகிறது. கிரக சேர்க்கைகளில் நன்மை, தீமை இரண்டும் உண்டு. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன், ராகுகேது, செவ்வாயுடன் சம்பந்தப்படும்போது அவர் மிகச்சிறந்த மருத்துவராக விளங்குவார். எம்.பி.பி.எஸ் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் ஒருவரை முன்னிறுத்துவது இந்த கிரக அமைப்புதான். ஆன்மிகம், தியானம், பக்தி, யோகம் போன்றவற்றில் தேர்ச்சி உண்டாகும். அதேநேரத்தில் பலவீனமான தசை காலங்களில் பயம், படபடப்பு, கோபம், வெறி, விரக்தி, இயலாமை, அவமான உணர்ச்சி, சுய பச்சாதாபம், ஆற்றாமை, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களை சந்திரன், ராகுகேது கிரகங்கள் ஏற்படுத்துகின்றன. சந்திரன் ராகு அல்லது சந்திரன் கேது கூட்டணியுடன் சனி, புதன் சம்பந்தப்படும்போது நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு ஏதேதோ உளற ஆரம்பித்து விடுவார்கள். கேதுவால் விரக்தி, வெறி ஏற்படும்.


 • பரிகார தலங்கள்

  சந்திர பகவானுக்குரிய சிறந்த பரிகாரத் தலமாக தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திங்களூர் சந்திரன் கோவில் இருக்கிறது. ஏதேனும் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்தில் காலை 9 மணிக்குள்ளாக திங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு, சென்று சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவதால் ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். வளர்பிறை திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் சந்திரனுக்கு மல்லிகை பூ சாற்றி, நிறமி சேர்க்கப்படாத கேசரி அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் வழிபட பாதிப்புகள் குறையும். வருடம் ஒருமுறையாவது திருப்பதி சென்று திங்கட்கிழமை திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.


 • பிரதோஷ வழிபாடு

  சந்திரனை தலையில் சூடி சோமசுந்தரனாக காட்சி அளிப்பவர் சிவபெருமான். கார்த்திகை சோமவார விரதம் இருந்து சங்காபிஷேகம் பாருங்கள் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்குத் தோஷம் போக்கவும் வளர்பிறை பிரதோஷம் வாழ்வின் வளம் சேர்க்கவும் ஏற்றதாகும். அதேபோல நமக்கு தெரியாதவர்கள், உணவிற்காக கஷ்டப்படுபவர்களுக்கு அன்னதானம் செய்வது அவசியம். இதன் மூலம் சந்திர தோஷங்கள் தீரும்.
சந்திரன் தாய்காரகர், மனதிற்கு காரகர், முகத்திற்கு காரகர், உணவிற்கு காரகர். அம்மாவின் அன்பு அரவணைப்பு கிடைக்க வேண்டுமெனில் சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் சுப கிரகங்களுடன் கூடியும் சுப கிரகங்களின் பார்வை பெற்று இருப்பது அவசியம். ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நிலையினை வைத்துதான் ஒருவர் பிறந்த ராசி தீர்மானிக்கப்படுகிறது. சந்திரன் உடலுக்கும் காரகன். சர்வம் சந்திரமயம் என்று சந்திரனை ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஜாதகத்தில் லக்னம் தலை என்றால் ராசி உடல். நீங்க என்ன நட்சத்திரம் ராசி என்றுதான் கேட்பார்கள், அதை வைத்துதான் கோவிலில் அர்ச்சனை செய்கிறோம். இந்த ராசியின் அடிப்படையிலேயே யோகங்கள் உண்டாகின்றன.

தண்ணீர் கடலும் கடல் சார்ந்த பொருட்களுக்கும் காரகர் சந்திர பகவான் ஆவார். கால புருஷனுக்கு நான்காம் வீடான கடகம் ராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். ரிஷப ராசியில் உச்சம் பெறும் சந்திரன், விருச்சிகத்தில் நீசமடைகிறார். கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும். மாத்ரு காரகன், மனோ காரகன் என்றெல்லாம் ஜோதிடத்தில் சிறப்பிடம் பெற்ற நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சந்திரன் மகாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாகவும் பாற்கடல் கடைந்த போது தோன்றியதாகவும் புராண கதைகள் கூறுகின்றன. மிகப்பெரிய தவம் செய்து நவகிரஹ பதவி பெற்றவர் சந்திர பகவான்.

சந்திரன் சுப கிரகங்களுடன் சேரும் போது யோகமாகவும், அதுவே ராகு கேது போன்ற சர்ப்ப கிரகங்களுடன் சேரும் போதும் சனியோடு சேரும் போதும் தோஷமாகவும் மாறுகிறது. சந்திரன் தரும் யோகங்கள் ஒருவரை வாழ்க்கையில் உச்சத்தை அடைய வைக்கும். வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு சந்திரனால் யோகம் இருந்தால் அந்த குழந்தையின் ஜாதகத்தால் அந்த குடும்பம் செல்வ வளத்துடன் கூடிய கோடிஸ்வரர் குடும்பமாக மாறிவிடும். அந்தளவுக்கு யோகத்தை வழங்ககூடிய அமைப்பு சந்திரனுக்கு உண்டு.