Back
Home » திரைவிருதுகள்
பேரன்பு அப்பாவாக வாழ்ந்து காட்டிய மம்மூட்டி - மகுடம் 2019 விருது வழங்கிய கமல்
Oneindia | 19th Oct, 2019 02:17 PM

சென்னை: சிறந்த நடிகருக்கான மகுடம் 2019 விருதினை, பேரன்பு படத்தில் நடித்த மலையாள நடிகர் மம்மூட்டிக்கு கமல்ஹாசன் வழங்கினார். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது 14 வயது பெண் குழந்தை உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தடுமாறும் பருவத்தில் இருக்கும் அவளை வைத்து கொண்டு தவிக்கும் ஒரு பாசமான தந்தையின் போராட்டம் தான் பேரன்பு திரைப்படத்தின் மையக் கருவாகும்.

தமிழர்கள் எந்த துறையில் தான் இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம். நிச்சயம் உங்களுக்கு பதில் கிடைக்கவே கிடைக்காது. அந்த அளவிற்கு தமிழ், அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம், சினிமா, இலக்கியம், கலை என அனைத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி சாதனை பல படைத்து வருகிறார்கள். அப்படி பட்ட தமிழர்களை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

தமிழ்நாட்டின் முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் மிகவும் பிரமாண்டமான நியூஸ் நெட்ஒர்க் குழுமத்தின் நியூஸ் 18 தமிழ்நாடு, இந்த சாதனை புரியும் தமிழர்களை கவுரவிக்கும் வகையில் மகுடம் விருது 2019 விருதுகளை நேற்று வழங்கியது.

அந்த விழாவில் சிறந்த சமூக சேவகர், சிறந்த எழுத்தாளர், சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த திரைப்பட நடிகை என பல விருதுகளை வழங்கப்பட்டது. அந்த வகையில் சிறந்த நடிகருக்கான விருதை பேரன்பு படத்தில் தனது யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மம்மூட்டி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது நடிப்பா அல்லது உண்மையா என்று தெரியாத அளவிற்கு அப்படி ஒரு நிஜ தந்தையை போல் பேரன்பு படத்தில் வாழ்ந்துள்ளார் மம்முட்டி.

மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட தனது 14 வயது பெண் குழந்தை உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தடுமாறும் பருவத்தில் இருக்கும் அவளை வைத்து கொண்டு தவிக்கும் ஒரு பாசமான தந்தையின் போராட்டம் தான் பேரன்பு திரைப்படத்தின் மையக் கரு.

"ஏமாற்றிய அந்த நடிகர் பெயரைச் சொல்லக் கூடாது".. மிரட்டப்படுகிறாரா ஆண்ட்ரியா?

பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியானது. ரசிகர்களிடம் நேர்மறையான வரவேற்பை பெற்ற இப்படம் 49ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் நுழைந்து கனவுக் கன்னிகளாக வலம் வந்த காலத்தில் ஒரே ஹீரோ நம் தமிழ் சினிமாவை தனது மலையாளம் கலந்த தமிழால் பேசி அனைவரையும் கவர்ந்த அழகன் மம்மூட்டி. மவுனம் சம்மதம், அழகன், தளபதி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்க்ளில் பல வித்யாசமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார் மம்மூட்டி.

இந்த சிறந்த நடிகருக்கான மகுடம் விருது 2019 விருதினை மம்மூட்டிக்கு வழங்கினார் நமது உலக நாயகன் கமல்ஹாசன். இருவரும் சினிமாவையும் தாண்டி நல்ல நண்பர்கள். இந்த இரு நட்சத்திரங்களும் மேடையில் ஏறியவுடன் மேடையே ஒளிர்விட்டது.

மேலும், பல விருதுகளை மம்மூட்டி தனது யதார்த்தமான நடிப்பால் நிச்சயம் கைப்பற்றுவார். அவருக்கு ஃபில்மி பீட் சார்பாக வாழ்த்துக்கள். மகுடம் விருதுகள் 2019ல் சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், தமிழ் சினிமாவின் முகம் என்ற சிறப்பு விருது மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.