Back
Home » திரைவிமர்சனம்
மிக மிக அவசரம்: நிறுத்தி நிதானமாக எடுக்க பட்ட நல்ல படம்
Oneindia | 11th Oct, 2019 09:36 AM

சென்னை: சமூகம் சார்ந்த பிரச்சனை, அரசியல், குடும்ப கதை என பலதரப்பட்ட திரைப்படங்கள் வெளியானாலும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் என்றால் மக்களிடம் அதற்கு ஒரு தனி ரெஸ்பான்ஸ் இருக்கும். அப்படி பெண்கள் தங்களது தினசரி வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகள் குறித்த ஒரு கதை தான் மிக மிக அவசரம் திரைப்படம்.

வி ஹவுஸ் புரோடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா, ஹரிஷ், முத்துராமன், இ.ராமதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொதுவாக ஒரு படம் உண்மை சம்பவத்தை சார்ந்தோ அல்லது ஏதாவது ஒரு கதையின் பின்னணியில் இருந்து உருவாக்கப்பட்ட கதையாகவோ இருக்கும். ஆனால் இந்த மிக மிக அவசரம் திரைப்படம்

ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும். படத்தின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருப்பதால் படத்தின் ட்ரைலர் வெளியான உடன் மக்களிடம் பல கேள்விகளுடன் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

இப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பிரியங்கா ஒரு காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். பொதுவாகவே பெண்கள் சமூகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதுவே ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்கும் போது அவர்கள் எப்படி தங்களுடைய சொந்த வாழ்க்கை, பணிபுரியும் இடம், தனிப்பட்ட விஷயம் என பல விஷயங்களால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அதை எப்படி சமாளித்து அந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.

படத்தில் உயர் காவல்துறை அதிகாரி எப்படி தனக்கு கிழே பணிபுரியும் ஒரு பெண் காவல்துறை அதிகாரியை, தனது சொந்த பகைக்காக கொடுமைப்படுத்துகிறார் என்பது தான் இந்த படத்தின் முக்கியமான கதைக் கரு. அந்த பெண் காவல் அதிகாரி ஒரு பாலத்திற்கு மேல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். காலை முதல் மாலை வரை அவர் அனுபவிக்கும் சங்கடங்களை, சந்திக்கும் மனிதர்களை, உடல் ரீதியான பிரச்சனைகளை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் சிறப்பாக செய்திருக்கிறார் ஸ்ரீ பிரியங்கா.

ஒரே மாதிரியான நெளிவு சுளிவு தான் பல காட்சிகளில், ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு எந்த நெளிவு சுளிவும் ஏற்படவில்லை. இன்டெர்வெல் வரும் பொது, பல ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்வது, ரெஸ்ட் ரூம் போகாமல் படம் பார்ப்பதே கஷ்டம். ஆனால் இந்த கதையில் வரும் பெண் தன் சூழ்நிலை கஷ்டங்களை பொறுத்துக் கொண்டு அந்த நாளை கடந்து செல்ல எவ்வளவு முயற்சி செய்கிறாள் என்பது தான். இன்டெர்வெல் முடிந்து சீக்கிரம் அனைவரையும் சீட்டுக்கு வர வைக்கிறது காட்சிகள்.

காவல் பணியில் சந்திக்கும் அவலம் ஒரு புறம், தந்தை மற்றும் அக்காவை பறிகொடுத்து அக்காவின் மகளை, தனது குடிகார மாமனிடம் இருந்து பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பான பெண்ணாக ஒரு புறமும், காதலியாக மறுபுறமும் சிறப்பாக நடித்துள்ளார் ஸ்ரீ பிரியங்கா. இப்படம் அவருக்கு நிச்சயம் ஒரு நல்ல பெயரை தமிழ் சினிமாவில் பெற்று தரும்.

உயர் போலீஸ் அதிகாரியாக வரும் முத்துராமன் அவரது நண்பர் வேலையில் இருந்து சஸ்பெண்ட் ஆனதற்கு காரணமாக இருந்த ஸ்ரீ பிரியங்காவை எப்படி பழிவாங்குகிறார். ஒரு பெண் நாள் முழுவதும் தனது அவசர தேவைகளுக்காக கூட ஒதுக்க முடியாமல் எப்படி பாடு படுகிறார் என்பதை மிக அழகாக பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டாமல் மிகவும் நேர்த்தியாக படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

அந்த பெண்ணின் நிலைமை என்ன ஆனது என்பதை ஒரு கேள்விக்குறியோடு படத்தை முடித்துள்ளார். அந்த கேள்விக்கு சமூகம் தான் பதிலளிக்க வேண்டும்.

உயர் அதிகாரி முத்துராமனுக்கு மேல் அதிகாரியாக நடித்துள்ளார் சீமான். அவர் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். இப்படத்தில், பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் அவலங்களை எடுத்து சொல்லும் ஒரு பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. இப்பாடல் வரிகளை எழுதியவர் இயக்குனர் சேரன். இஷான் தேவ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒரு சிறிய பட்ஜெட் திரைப்படம் பெரிய படங்கள் மத்தியில் மக்களிடம் அவ்வளவு எளிதில் வரவேற்கப்படுவதில்லை. இதில் என்ன பெரிய கதை இருக்க போகிறது என்று ஒதுக்குபவர்கள் பலர். உண்மையில் பார்த்தால் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் தான் யதார்த்தமான வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அவலங்கள் பிரச்னைகளை சுட்டிக்காட்டுகின்றன.

அதனால் பெரிய பட்ஜெட் படங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கும் கொடுத்தால், நிச்சயம் தென்னிந்திய சினிமா நல்ல முன்னேற்றத்தை அடையும். அந்த படங்கள் நிச்சயம் ஒரு கருத்தினை மையமாக வைத்து அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும்.

ஒரு சிறிய பட்ஜெட் திரைப்படமாக இதை நாம் பார்க்காமல் இந்த படத்தை தியேட்டர் சென்று பார்த்தால் மிக மிக அவசரம் திரைப்படம் நிச்சயம் பேசப்படும். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கிறார்கள் படக்குழுவினர். இது போன்ற படங்கள் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டும்.