Back
Home » திரைவிமர்சனம்
அசுரன் - சினிமா விமர்சனம்
Oneindia | 4th Oct, 2019 02:36 PM

சென்னை: வடக்கூடாரானுக்கும் சிவசாமிக்கும் இடையே நிலத்தகராறு. சிவசாமியின் மூத்த மகன் முருகன் கொல்லப்பட அதற்கு பழி தீர்க்க இளைய மகன் சிதம்பரம் வடக்கூரானை கொலை செய்ய அதற்கு பழிக்குப் பழி வாங்க வடக்கூரானின் ஆட்கள் கத்தியை தூக்க பரபரப்பாக டாப் கியரில் கிளம்புகிறது அசுரன்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நான்காவது படம் அசுரன். பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து அசுரன் படத்தில் தனுஷ் - ஜி.வி கூட்டணி இணைந்துள்ளது. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள அசுரன் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார் தணுஷ். எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இன்று திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது அசுரன். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் தூள். வெற்றிமாறன் - தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணி என்பது அனைவரும் அறிந்ததே. இப்படமும் அந்த வெற்றி வரிசையில் இணையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை நம் கண் முன்னே காட்சியாக கொண்டு வருகிறது. பொதுவாக நாவலை படமாக எடுக்கும் பொழுது, படிக்கும் போது இருந்த சுவாரஷ்யம் இதில் இல்லையே என்று சொல்வார்கள். ஆனால் வெற்றிமாறன் காட்சிகளை உணர்வுபூர்வமாக எடுத்துள்ளார். அதுவும் தேசிய விருது பெற்ற நடிகரின் சிறப்பான நடிப்பால். இப்படம் ஒரு படி மேலே உயர்த்தப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

கோவில்பட்டி கதைக்களம். சாதிய வன்மத்தால் இரு பிரிவினர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை மிகவும் அழகாக படமாக்கியுள்ள வெற்றிமாறனுக்கு ஒரு பலத்த கைதட்டல் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் எந்த இடத்திலும் ஜாதி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் எடுத்ததற்காக வெற்றிமாறனுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் மஞ்சு வாரியார் இப்படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியிருக்கிறார். சிவசாமி தனுஷின் மனைவியாக, பச்சையம்மாளாக வாழ்ந்திருக்கிறார் மஞ்சு வாரியார். இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள், ஒரு மகள் என அழகான குடும்பம். இந்த சாதாரண குடும்பம் எப்படி கொலை, இடப்பிரச்சனை, ஜாதி வேறுபாடு, வன்மம் போன்ற பல பிரச்சனைகளால் சின்னா பின்னமாகிறது என்பது தான் கதை.

பிரகாஷ் ராஜ் படத்தின் இடைவேளைக்கு பின், ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் அவரின் சிறப்பான திறமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். டாக்டர் அம்பேத்கர் போல சித்தரிக்கப்பட்டுள்ள பிரகாஷ் ராஜ் ஒரு வழக்கறிஞராக பட்டியலின மக்களுக்காகவும் அவர்களின் நியாயத்திற்காகவும் போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் தலித் மக்கள் தான் இவர்கள் என்று எந்த வசனத்திலும் குறிப்பிட்டு இருக்க மாட்டார்கள். உடை, அவர்களது நியாமான கோபம், மற்றவர்கள் அவர்களை செய்யும் அடக்குமுறை, இவைகளை வைத்து நாம் காட்சியின் தன்மையை நன்கு ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

மோசமான போலீஸ் ஆக அதிரடி காட்டி நடித்துள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். கோவில்பட்டியின் முகமாகவே மாறியிருக்கிறார் கென். வில்லன் கதாபாத்திரத்தில் வன்மம் கொண்டவராக நடித்துள்ளார் ஆடுகளம் நரேன். தனுஷின் முத்த மகனாக டீஜெய் அறிமுகமாகியுள்ளார். இவர் முட்டு முட்டு, ஆசை போன்ற ஆல்பங்கள் மூலம் பிரபலமானவர். தனுசின் மூத்த மகன் முருகனாக நடித்துள்ளார். 15 வயதுடைய இரண்டாம் மகனாக வரும் கென் கருணாஸ் படத்தின் திருப்பு முனையாக அமைந்துள்ளார். அண்ணனை கொன்றவனை பழிவாங்குவதற்காக கொலை செய்ய துரத்தும் சிதம்பரம், அதன் பிறகு ஒட்டுமொத்த தனுஷின் குடும்பமே காட்டுக்குள் சுற்றித் திரிகிறது. அவர்கள் இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி மீளுகிறார்கள் என்பதே மீதி கதை.

சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட மிகவும் அழுத்தமாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயர்களும் மிகவும் பொருத்தமாக வைக்கப்பட்டுள்ளன. செருப்பு போடுவதால் கூட இரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை உள்ளது என்பதை உருக்கமாக காட்டியுள்ளார் இயக்குனர். அவரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. பொன்.சுதா இயக்கத்தில் வந்த குறும் படம் நடந்த கதை பல இடங்களில் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

ஒரு சில பாடல்களில் கண்ட்டினியுட்டி மிஸ்டேக்காக அமைந்துள்ளன. ஒரு பெரிய எதிர்பார்ப்புள்ள படம் என்பதால் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம். மற்றபடி பாடல்கள் அனைத்தும் அருமை.

படத்தின் முதல் பகுதியில் முழுமையாக தனுஷ் அப்பா கதாபாத்திரத்திலும் இரண்டாம் பகுதியில் இளமையான கதாபாத்திரத்திலும் தெறிக்க விட்டுள்ளார் என்றே கூறவேண்டும். தான் சிறு வயதில் அனுபவித்த கொடுமைகளை தன் மகன் அனுபவிக்கப் கூடாது என்பதற்காக ஒரு அசுரவதத்தை செய்கிறார் தனுஷ். நம்மிடம் இடம், பணம் என எது இருந்தாலும், அதை மற்றவர்கள் அபகரித்து கொள்வார்கள். நம்மிடம் இருந்து பிடுங்கி கொள்ள முடியாத ஒரே விஷயம் நம்முடைய படிப்பு தான் என்று தனுஷ் தன் மகன் கென்க்கு கொடுக்கும் கிளைமாக்ஸ் அட்வைஸ் பிரமாதம்.

படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்களின் விமர்சனங்களும் மிகவும் பாசிட்டிவாக இருப்பதால் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள் படக்குழுவினர். இன்னும் தமிழ்நாட்டில் நடக்கும் ஜாதி பிரச்சனைகளை பல நேரங்களில் படிக்கும் போதும் பார்க்கும் போதும் வேதனையாக இருக்கும். இவை அனைத்தும் நடந்த கதை மட்டும் அல்ல, நடக்கின்ற கதையும் கூட.

100 % காதல் - ஆடியன்ஸ்க்கு 100 % பொறுமை முக்கியம்

இந்த அசுரன் படம் மூலம் வெற்றிமாறன், செருப்பு இல்லாமல் நடந்த கதையையும், செருப்புடன் நடந்த கதையையும் காட்சிகள் மூலமும், திரைக்கதை மூலமும் அழகாக அனைவரையும் நடக்கவும் நடிக்கவும் வைத்து உள்ளார்.

வழக்கமான வெற்றிமாறன் படம், அதே மேக்கிங் என்று சிலர் சொன்னாலும் எடுத்துக்கொண்ட விஷயம், சமூக அக்கறை, அவரது நேர்த்தியை காட்டுகிறது. மிகப்பெரிய அளவில் இந்த படத்தை ப்ரமோஷன் செய்தவர் கலைப்புலி எஸ்.தாணு. வசூலிலும் அசுரன் சூரனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.