Back
Home » திரைத் துளி
பாரதியார் எழுதியவை வெறும் பாட்டு வரிகள் அல்ல.. அவை தமிழ் மந்திரங்கள்
Oneindia | 11th Sep, 2019 02:20 PM

சென்னை: இது வைர பாரதியின் மீடியா முண்டாசுக்காரன் பகுதி இரண்டு.

பாரதி என்பவன் தேசத் திருவிழா போன்றவன்.

அவனைக் கொண்டாட ஆரம்பிக்க அவனுள்ளே காணாமல் போய்விடுவோம் ...

அவன் எழுதியவை வெறும் வரிகள் அல்ல தமிழ் மந்திரங்கள்.

ஒலிப்பதிவு கூடத்திற்கு மிக அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார் அப்போது ஒரு குடும்பம் இவரை சந்திக்க வந்தது ...

அதில் பால் மணம் மாறா ஒரு குட்டிப் பெண் இருந்தாள்.

அவளைப் பாடச் சொல்லினர் ...

அவளும் பாடினாள்...

மன்னருக்கு எப்போதும் கை கால் துறு துறுவென்றிருக்கும் ...

கலைமகள் கைக்குழந்தை அவர்...

அதைக் கேட்டவுடன்...

உடனேயே அந்த சின்னஞ்சிறு பெண்ணை ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

பிறகு தான் நினைவுக்கு வந்தது

அடடா வாணி ஜெயராம் அவர்களை வரச் சொல்லி இருக்கிறோமே என்பது

உடனே தொலை பேசி சுற்றி

"அம்மா மன்னிச்சுடுங்க

நீங்க இன்னிக்கு பாட வேண்டிய பாட்ட ஒரு புதுப் பொண்ணு வெச்சு பாட வைக்கிறேன்.. நல்ல திறம... நீங்க வேறொரு பாட்டு பாடுங்க.. நான் கூப்டறேன் ..."

ஓ.கே சார் இது வாணி அம்மா...

மெல்லிசை மன்னர் ஏன் மன்னிப்பெல்லாம் கேட்டார். அதான் இங்கிதம்.

முண்டாசுக் கவியின் பாடல்களில் மிளிர்ந்த தமிழ் சினிமா.. கலைஞர்கள்

பிறகு பாடல் ஒலிப்பதிவானது ...

நம் பாரதி வரிகளால் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணுக்குக் கலைக் கதவு திறந்தது ...

அந்தப் பாடலே

நீதிக்கு தண்டனை திரைப்படத்தில் வரும் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா ...

அதுவும் சொர்க்க குரலோன் ஏசுதாஸ் அவர்களோடு டூயட் ...

பிள்ளைக் கனியமுதே என்ற வரியில் அமுதே வில் ஒரு கமக்கம் கொடுக்க வைத்திருப்பார் மன்னர்..

முதல் பாடலே பாரதி பாடல் பாடகி சுவர்ண லதாவுக்கு...

நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி என்ற பாடல் கண்ணே கனியமுதே .. மெல்லிசை மன்னர் பாரதி வரிகளில் புரிந்த ஜாலம்‌.. புல்லரிக்க வைக்கும்

கவியரசருக்கு கம்பரின் பாதிப்பும் ... பாரதியின் தாக்கமும் அதிகம்‌..

ஒரு பாடல் முழுதும் பாரதி பாடல் தாக்கத்திலேயே எழுதி இருப்பார்

அந்தப் பாடல் தான் மீண்டும் கோகிலா படத்தின் சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி...

உன் கண்ணில் நீர் வழிந்தால் பல்லவி முதல் வரியும் சரி..

காவியக் கவிஞர் வாலியின் வார்த்தை தவறி விட்டாய் என்ற வரியின் என்னடி மீனாட்சி பாடல்...

பாப்பா பாட்டு பாடிய பாரதி இயக்குநர் சிகரத்தின் இரு கோடுகளில் எழுதி இருப்பார்...

நகைச்சுவை ஞானி நாகேஷுக்கு பாரதி வேஷம்..

மனுஷன் மிக மிக சிரமப்பட்டு முகத்தை சீரியசாக வைத்து வாயசைத்து அவர் பாணியில் அற்புதம் செய்திருப்பார்...

இயக்குநர் சிகரம் அதிகமாக பாரதியை பயன்படுத்தி இருக்கிறார்..

வறுமையின் நிறம் சிகப்பு.. அதில் கமல் அவர்கள் பாரதி கவிதைகளை ஆவேசமாய் அள்ளி வீசுவார்...

இப்ப ஒண்ணும் உனக்கு பாரதியார் பாட்டு ஞாபகத்துக்கு வர்லியோ என திரு பூர்ணம் விஸ்வநாதர் கேட்க

அச்சமில்லை கவிதை சொல்லியே வீட்டை விட்டு வெளியேறுவார் கமல்.

பாரதியார் கவிதைகளை அந்தப் படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே பயன்படுத்துவார் கே.பி...

கிளைமேக்ஸ் சிலும் கவிதை வரும் ...

தீர்த்த கரையினிலே பாடல் வரும் ...

காவியம் அந்தத் திரைப்படம்

அந்தப் பாதிப்பில் தான் பிறகு திரு கமல் அவர்கள் மகாநதி திரைப்படத்தில் பாரதி கவிதையை கர்ஜித்திருப்பார்.

திரு விசு அவர்கள் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் தன் பிள்ளைகளுக்கு சுதந்திர வீரர்களின் பெயரை வைத்திருப்பார். அதில் கடைக்குட்டியின் பெயர் பாரதி தான்.

அவர் இயக்கிய படமான வாய்ச் சொல்லில் வீரனடி பாரதி வரிகள் தான்.

பாரதி பாதிப்பில்லாத இயக்குநர்களோ கலைஞர்களோ எந்தக் காலத்திலும் இல்லை

நடிப்புப் புயல் ரகுவரன் நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் வயலின் மேதை திரு எல்.வைத்தியநாதன் காக்கைச் சிறகினிலே பாடலை நவீன ஒலிநுட்பத்தில் அற்புதமாய் இசையமைத்திருப்பார்.

பாரதி என்ற திரைப்படமே நம் இருபதாம் நூற்றாண்டு காலத்து காவியம். இசைஞானி இளையராஜா அவர்களின் மெட்டில் இன்றும் கொண்டாடப்படுகிறது...

இந்திய காந்திஜி ரோலை வெள்ளைக்காரன் நடித்தது போல்...

தென்னக பாரதி ரோலை தாகூர் மண்ணிலிருந்து வந்த சாயாஜி ஷிண்டே நடித்திருந்தார்... வாழ்ந்துமே இருந்தார்...

மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் நடிகை சுகாசினி அவர்களை ஒரு பாரதி கண்ட புதுமைப் பெண் போலவே காட்டியிருப்பார் திரு கே.பி அவர்கள்

இசைப்புயல் ரஹ்மான் அவர்களும் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தில் சுட்டும் விழிச் சுடர் விழிதான் கண்ணம்மா பாடலை ஹரிஹரன் மூலமாக மிதக்க விட்டிருப்பார்.

அதே பாதிப்பில் சுட்டும் விழிச் சுடரே கஜினி படத்தில் முதல் வரி எழுந்தது ...

நம் பாரதி வரி இல்லாத சினிமா டைட்டிலே இல்லை இன்று வரை ...

காக்கைச் சிறகினிலே... காற்று வெளியிடை... எங்கிருந்தோ வந்தான்... அச்சமில்லை அச்சமில்லை... தாயின் மணிக்கொடி... மனதில் உறுதி வேண்டும்...

பாஞ்சாலி சபதத்தில் வரும் சூது கவ்வும் ... பாரதியின் புதிய ஆத்திச் சூடியில் இடம் பெற்ற.. நேர் கொண்ட பார்வை ... ஆண்மை தவறேல்...

இந்தப் பட்டியலுக்கு ஓர் முடிவே இல்லை...

பாரதி என்ற பெயர் வைத்து எவன் தெய்வத்தை கிண்டல் செய்யும் நாத்திகனாகவோ.. நம் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவோ இப்போது இருந்தால்... என் உடம்பெல்லாம் கை முளைத்து கைக் கொட்டி சிரிக்கச் சொல்லும்.

பாரதி படைப்புகள் படித்தால் தேசம் காக்கப்பட வேண்டும்.. தெய்வம் ததிக்கப் பட வேண்டும் ..

கலாச்சாரம் மதிக்கப்பட வேண்டும் என்ற உணர்வே உயிரில் சென்று உட்கார்ந்து கொள்ளும்...

பாரதியை அவன் இவன் என்று சொல்வது ஒருமை அல்ல.. என் சொந்த பாட்டன் என்ற உரிமையால்...

பாரதியை வாசிப்பது என்பது நம் உயிருக்கான ஊட்டச்சத்து.

பாரதியை நேசிப்பது என்பது நம் உள்ளத்திற்கான காயகல்பம்...

பாரதியை சுவாசிப்பது என்பது நம் ஆன்மாவுக்கான அருள்.

வாழ்க பாரதி