Back
Home » பேட்டி
Exclusive: தூக்குப்போட்டு செத்துப்போன கருப்பன்.. பேய் இருக்குங்க.. அடித்து சொல்லும் விதார்த்!
Oneindia | 11th Sep, 2019 10:27 AM
 • கேட்கும் முன்பே சம்பளம்

  நாம் கேள்வியை கேட்கும் முன்னரே தயாரிப்பு நிறுவனத்தை புகழ தொடங்கிய விதார்த், "கேட்கும் முன்பே சம்பளத்தை அக்கவுண்டில் கிரெடிட் செய்துவிட்டார்கள், அந்தளவுக்கு தங்கமான நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு இது இரண்டாவது படம் என்றாலும் நல்ல அனுபவமிக்க குழுவுடன் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள்.


 • மீண்டும் சேரன்

  நாம் கேட்கும் முன்பே நமக்கு கிடைத்து விடுகிறது. தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம், சிஇஓ வெள்ளை சேது ஆகியோர் தேவையறிந்து ஒவ்வொன்றும் செய்கிறார்கள். அதனால் தான் சேரன் சார் இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் பண்ணபோவதாக கூறியிருக்கிறார்". என நமக்கு ஒரு தகவலையும் கூறினார்.


 • ஹாரர் த்ரில்லர்

  தொடர்ந்து படத்தை பற்றி கேட்ட போது பல்வேறு சுவாரசிய தகவல்களை கூறினார் விதார்த். " ஹாரர் த்ரில்லரில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. அப்படியிருக்கும் போது இப்படத்தின் ஸ்க்ரீன் பிளே எனக்கு ரொம்ப பிடிச்சுது. கதை ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. ஷுட்டிங் நல்லபடியா போகுது" என்றார்.


 • அடிச்சு சொல்றேன்..

  ஹாரர் மூவில நடிக்கிறீங்களே உங்களுக்கு பேய் பிசாசு பத்தின நம்பிக்கை இருக்கா என்று கேட்டோம். அதற்கு "அடிச்சு சொல்றேங்க பேய் இருக்கு, அதுல எனக்கு 100 சதவீத நம்பிக்கையும் இருக்கு. நான் அதை பர்சனலாவே மூன்று முறை உணர்ந்திருக்கேன். முதல் முறையா சிறு வயதில் ஊரில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்குள்ள ஒரு புளிய மரத்தில் மதியம் ஒரு மணியானால் போதும் பேய் வந்துவிடுகிறது என்று கூட்டம் கூட்டமாக வந்து பார்ப்பார்கள்.


 • இன்றுவரை திறக்கப்படவில்லை

  இதனால் பசங்க பள்ளிக்கூடம் போக மாட்டோம் என பயப்படுவார்கள் நானும் பயந்திருக்கேன். அதன்பிறகு அந்த பள்ளிக்கூடம் இழுத்து மூடப்பட்டது. நாங்கள் மரத்துக்கடியில் அமர்ந்துதான் படித்தோம். 25 வருடங்கள் ஆகிவிட்டது அந்த பள்ளிக்கூடம் இதுவரை திறக்கப்படவில்லை. பாழடைந்து கிடக்கிறது.


 • கொலுசு சத்தம், சலங்கை சத்தம்

  இரண்டாவது முறையாக, நான் டிரைவராக இருந்தபோது குன்னக்குடி அருகே திருமண சவாரிக்காக வேனில் சென்றோம். ஊரிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரம் வயக்காடெல்லாம் தாண்டி சென்றோம். அப்போது திருமண வீட்டார் எங்களை வீட்டில் வந்து படுக்குமாறு அழைத்தனர். ஆனால் நாங்கள் இல்லை வேனிலேயே படுக்கிறோம் என்று கூறிவிட்டோம். நேரம் செல்ல செல்ல கொலுசு சத்தம், சலங்கை சத்தம் கேட்க ஆரம்பித்தது. பின்னர் வேனை சுற்றி சுற்றி வந்து யாரோ தட்டியபடியே இருந்தது. தொடர்ந்து அந்த சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.


 • கருப்பன் சேட்டை பண்ணியிருப்பான்

  இதனால் பயந்து போன நாங்கள் வேனை விட்டு இறங்காமல், உள்ளேயே நடுங்கிக்கொண்டிருந்தோம். பின்னர் கல்யாண வீட்டுக்காரர்கள் ஒரு 10, 15 பேர் வேனை சுற்றி டார்ச் லைட் அடித்து, வண்டியை தட்டினர். அப்போதுதான் வேனை விட்டு வெளியே வந்தோம். இரவு முழுவதும் நடந்ததை அவர்களிடம் கூறினோம். அதற்கு அவர்கள் கருப்பன் சேட்டை செஞ்சிருப்பான், சும்மா என கேஷ்வலாக சொன்னார்கள். யார் கருப்பன் என்று கேட்டபோதுதான் சொல்கிறார்கள், அது தூக்குப்போட்டு செத்துபோன கருப்பன் என்று. அதனை கேட்ட நாங்கள் மிரண்டு போய்விட்டோம். அவர் தூக்குப்போட்டுக்கொண்ட மரம் பக்கத்துலேயே சுடுகாடு, அந்த இடத்துலதான் வண்டியை நிறுத்தி தூங்கியிருக்கோம். ராத்திரி நேரம் அப்படிங்கிறதால இருட்டுல தெரியாம அங்க நிறுத்திட்டோம். அதனாலதான் அவரு சேட்டை செய்தாராம்.


 • ஒரு ஆட்டுஆட்டி தூக்கிபோட்டுச்சு

  அதன்பிறகு ஒரு முறை எலுவங்கோட்டை என்ற இடத்தில் வேனில் தனியாக வந்துக்கொண்டிருந்தேன். அப்போது வானத்துக்கும் பூமிக்கும் டார்ச் லைட் அடித்தது போன்ற ஒரு வெளிச்சம், வண்டியை ஒரு ஆட்டு ஆட்டி தூக்கிபோட்டுச்சு. அதனால் பயம் இல்லை, ஆனால் ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அப்புறம் ஊர்ல போய் சொல்லும் போதுதான் எல்லோரும் அது பேயாக இருக்கும் என்றார்கள். அமானுஷ்யம்ங்கிறத விடவும் பேய் இருக்கு என்பதை தெளிவா உறுதியா சொல்கிறேன்", என்று தன்னுடைய பேய் எக்ஸ்பீரியன்ஸ்களை பகிர்ந்து கொண்டார்.
சென்னை: நடிகர் விதார்த் தான் உணர்ந்த பேய் மற்றும் அமானுஷ்யங்கள் தொடர்பான பல்வேறு சுவாரசிய சம்பவங்களை நம் தமிழ் பிலிமிபீட் தளத்துக்கு கொடுத்த சிறப்பு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் விதார்த் 2001 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் 2010ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் நடிகர் விதார்த். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஹாரர் த்ரில்லர் மூவியில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இப்படத்தை, சேரனை வைத்து திருமணம் என்ற படத்தை தயாரித்த பிரினிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சென்னை வளசரவாக்கத்தில் நடைபெறும் நிலையில், ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற நாம், அங்கு பிஸியாக இருந்த விதார்த்திடம் கிடைத்த கேப்பில் பேச்சுக்கொடுத்தோம்.