Back
Home » பயணம்
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Native Planet | 23rd Jul, 2019 03:42 PM

நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன் வரலாற்றின் பெரும்பாலான பகுதியில், நாகலாந்தின் பிற பகுதிகளைப் போன்று, உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்பட்டே இருந்துள்ளது.

Murari Bhalekar

1876-ஆம் ஆண்டில் தான் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து, இதனை நாகா மலைகள் மாவட்டத்தின் தலைமையகமாக, அஸ்ஸாமின் கீழ் கொண்டு வந்துள்ளனர். வோக்கா ஏராளமான மலைகள் மற்றும் மலைமுகடுகளால் சூழப்பட்டுள்ளதனால் இது, அழகிய இயற்கைக்காட்சிகள் நிறைந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கண்கவர் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இது வடக்குப்புறத்தில் மோக்கோக்சங் மாவட்டத்தாலும், கிழக்குப்புறத்தில் சூன்ஹேபோட்டோவினாலும், மேற்குப்புறத்தில் அஸ்ஸாமினாலும் சூழப்பட்டுள்ளது.

வோக்காவில் சுற்றுலா லோதா பழங்குடியினர் மிகவும் அன்பானவர்கள். வோக்கா வரும் சுற்றுலாப் பயணிகளை நட்போடு வரவேற்று மனதார அரவணைக்கின்றனர். இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களான டோக்கு, பிக்குச்சாக் மற்றும் இமோங் ஆகியவற்றின் போது மட்டும் தான் சிறந்த உள்ளூர் நடனம் மற்றும் இசை ஆகியவற்றைக் கண்டு ரசிக்க இயலும். பல தலைமுறைகளாக வழி வழியாகக் கற்பிக்கப்பட்டு வரும் கைவினை தொழில்நுட்பத்தின் மூலம் இங்கு தயாராகும் சால்வைகளுக்கு இந்நகரம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வோக்கா நகரம், தியி சிகரம், டோட்ஸு மற்றும் டொயாங் நதி போன்ற பல சுற்றுலா ஈர்ப்புகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமக்கள், நாகலாந்து மாநிலத்திற்குள் செல்ல வேண்டுமெனில், ஒரு உட்புற அனுமதிச்சீட்டு வாங்க வேண்டியது அவசியம். இந்த எளிய ஆவணத்தை, புது தில்லி, கொல்கத்தா, குவாஹத்தி அல்லது ஷில்லாங்கில் உள்ள நாகலாந்து இல்லத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் இவ்வனுமதிச் சீட்டை, திமாப்பூர், கோஹிமா மற்றும் மோக்கோக்சங் ஆகிய நகரங்களின் உதவி கமிஷனருக்கு ஆவண செய்தும் பெற்றுக் கொள்ளலாம்.

Methiulengwibo

டொயாங் நதி, வோக்கா வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாக இருந்து வந்துள்ளது; ஆனால் சமீபகாலங்களில் டொயாங் நதிநீர் திட்டமே வோக்கா வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு இடமாகத் திகழ்கிறது. டொயாங் நதிக்குக் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள இந்த 75 மெகாவாட் நீர்நிலைத் திட்டம் அதன் உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகிய காட்சிகளுக்கு மிகவும் புகழ் பெற்றுள்ளது. வோக்காவிலிருந்து சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த அணை மற்றும் நீர்த்தேக்கம் குதூகலமான ஒரு கண்கவர் பவனியை வழங்குகிறது. வோக்காவின் சில கிராமங்களில் உள்ள மலை உச்சிகளிலிருந்து இந்த அணை எளிதாக உங்கள் பார்வைக்குக் கிடைக்கும். அவ்வாறு பார்க்கும்போது உங்கள் உடலில் அட்ரினலினின் சுரப்பு அதிகரிப்பதை உணர்ந்தீர்களானால், இது நிச்சயம் உங்களுக்கு அதீதக் கிளர்ச்சியூட்டும் சுற்றுலாத்தலங்களுள் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. நீங்கள் மலையுச்சியிலிருந்து அடர்ந்த காடுகளின் வழியே நடைப்பயணம் செய்து இந்த நீர்த்தேக்கத்தை அடையலாம். செல்லும் வழியில் இங்குள்ள வித்தியாசமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை நீங்கள் காணலாம்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1969 அடி உயரத்தில் அமைந்துள்ள தியி சிகரம் தான் வோக்கா நகரின் மிகப் பிரபலமான் சுற்றுலா ஈர்ப்பாகும். உள்ளூரில் உலவும் செவி வழிக் கதைகளின் படி ஒரு காலத்தில் இந்த மலைச்சிகரத்தில் இருந்த தோட்டத்தை அதிர்ஷ்டம் உள்ளவர்களால் மட்டுமே காண முடிந்ததாகக் கூறப்படுகிறது. இன்று வண்ணமயமான ரோடோடென்ரான்கள் இந்த சிகரம் எங்கும் படர்ந்து கண்கொள்ளாக் காட்சியாக தோற்றமளிக்கிறது. லோதாக்கள், செமாக்கள் மற்றும் ஏயோஸ் பழங்குடியினர்கள், இவ்விடத்தை தங்கள் முன்னோர்களுடைய ஆன்மாக்களின் உறைவிடமாகப் போற்றுகின்றனர். இந்த மலைச்சிகரத்தில் இருந்து பார்த்தால் இதன் அடிவாரக் கிராமங்கள் மற்றும் பள்ளத்தாக்கு, பச்சைத் தூரிகையில் சிறு வீடுகள் வரையப்பெற்று வண்ணம் தீட்டப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.